Photo: Facebook/ Football Sri Lanka
தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப்பில் இந்தியாவை எதிர்த்தாடிய இலங்கை அணி கோல் எதுவுமின்றி சமநிலை செய்து அதிர்ச்சி கொடுத்தது.
அத்துடன், இந்தப் போட்டியில் இலங்கை அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டக்சன் பியுஸ்லஸ் போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவாகினார்.
தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் 13ஆவது சீசன் மாலைதீவுகளில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா, மாலைதீவுகள், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.
இத்தொடரில் 7 தடவைகள் சம்பியன் வென்ற இந்திய அணி, தமது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை சமநிலை செய்தது.
இதேவேளை உலக தரவரிசையில் 205 ஆவது இடத்திலுள்ள இலங்கை அணி, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய இரு அணிகளிடமும் தோல்வியைத் தழுவிய நிலையில், உலக தரவரிசையில் 107 ஆவது இடத்தில் உள்ள இந்தியாவை நேற்று சந்தித்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறுமென எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்திய அணியின் ஆட்டத்தில் தீவிரம் குறைவாக தெரிந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இலங்கை அணி எல்லா வகையிலும் சவால் அளித்தது. இறுதியில் போட்டியானது கோல் எதுவுமின்றி சமநிலையில் நிறைவடைந்தது.
இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டியொன்று 18 ஆண்டுகளுக்குப் பிறகு சமநிலையில் நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
2003 இல் பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் போட்டி சமநிலை பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் சிவப்பு அட்டை பெற்று கடந்த போட்டியில் விளையாடாமல் இருந்த வடக்கின் நட்சத்திர வீரர் டக்சன் பியுஸ்லன் இந்தியாவுடனான போட்டியில் மீண்டும் களமிறங்கினார்.
இவரின் மீள் வருகையால் இலங்கையின் தடுப்பாட்டம் மேலும் சிறப்பாக அமைந்ததுடன், இந்தியாவின் பெரும்பாலான கோல் முயற்சிகளையும் தடுத்து அசத்தினார். இதன்காரணமாக அவருக்கு போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் நேபாளம் 6 புள்ளிகள், பங்களாதேஷ் 4 புள்ளிகள் என்ற ரீதியில் முதல் இரு இடங்களில் உள்ளன. அத்துடன் 2 புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஒரு புள்ளிகளைப் பெற்று கடைசி இடத்தில் உள்ள இலங்கை அணி, தனது கடைசிப் போட்டியில் மாலைதீவுகள் அணியை ஒக்டோபர் 10 ஆம் திகதி சந்திக்கவுள்ளது. இதில் வென்றாலும் இலங்கைக்கு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகுவது கடினம்.