January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2021: அதிவேகமாக பந்துவீசி ஜம்மு காஷ்மீர் வீரர் சாதனை

Photo:Twitter/ IPL

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் 152.95 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வீரர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர் 142 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியால் 137 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரரான உம்ரான் மாலிக் விளையாடினார்.

இவர், போட்டியின் 2 ஆவது ஓவரை வீசினார். முதல் பந்தை மணித்தியாலத்துக்கு 147 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதுடன், நான்காவது பந்தை 152.95 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார்.

அவரின் இந்தப் பந்துவீச்சு இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் மிகவும் வேகமாக வீசப்பட்ட பந்தாக இடம்பிடித்தது.

இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் லுக்கி பெர்குசன் 152.75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியிருந்த நிலையில், அந்த சாதனையை  உம்ரான் மாலிக் முறியடித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி, இம்முறை ஐ.பி.எல் தொடரில் அதிவேகமாக பந்துவீசியவர்களில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்த முதல் இந்திய வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.

எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் உம்ரான் மாலிக் 4 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களை கொடுத்து, ஒரு விக்கெட் வீழ்த்தினார்.