July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓமானுடனான முதல் டி-20 போட்டியில் இலங்கை அபார வெற்றி

அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் தசுன் ஷானகவின் அரைச் சதங்கள் மற்றும் லஹிரு குமாரவின் அபார பந்துவீச்சின் உதவியால் ஓமான் அணிக்கெதிரான முதலாவது டி-20 போட்டியில், இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலும், ஓமானிலும் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில், இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட சர்வதேச டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாட ஓமானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டி-20 போட்டி மஸ்கட் நகரில் உள்ள ஓமான் கிரிக்கெட் பயிற்சியக மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை சந்தித்தது. இதனால் ஒரு கட்டத்தில் 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை அணி தடுமாறியது.

எனினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் அணித் தலைவர் தசுன் ஷானக ஆகிய இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்காக 111 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணிக்கு வலுச்சேத்தனர்.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ 83 ஓட்டங்களையும், தசுன் ஷானக 51 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டனர்.

ஓமான் அணி சார்பில் அதிகபட்சமாக அஹ்மட் பயாஸ் பட் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஓமான் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் ஓமான் அணி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள இழந்து தடுமாறியது.

இறுதியில் ஓமான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களுக்கு 143 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 19 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது

இதன்போது ஓமான் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக மொஹமட் நசீம் 40 ஓட்டங்களையும், மொஹமட் நதீம் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக லஹிரு குமார 4 விக்கெட்டுக்களையும், நுவன் பிரதீப் மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றிக்கமைய இரண்டு போட்டிகள் கொண்ட, டி-20 தொடரில் 1 – 0 என இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டி-20 போட்டி நாளை 9 ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.