July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: நடுவர் குழாத்தில் இரண்டு இலங்கையர்கள்

Photo: Twitter/ ICC

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள ஐசிசி டி-20 உலகக் கிண்ணத்துக்கான போட்டி மத்தியஸ்தர்கள் மற்றும் நடுவர்கள் விபரத்தை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

7 ஆவது டி-20 உலகக் கிண்ணமானது, ஓமானின் மஸ்கட் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், சார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மைதானங்களில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இம்முறை டி-20 உலகக் கிண்ணத்தில் முதல் சுற்று மற்றும் சுப்பர் 12 சுற்றில் கடமையாற்றவுள்ள போட்டி மத்தியஸ்தர்கள் மற்றும் நடுவர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசியினால் பெயரிட்டுள்ள இந்தப் போட்டி அதிகாரிகளின் பட்டியலில், 16 நடுவர்கள் மற்றும் 4 போட்டி மத்தியஸ்தர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

45 போட்டிகளைக் கொண்ட இந்த தொடருக்கான, நடுவர் குழாத்தில், அலிம் தார், மரைஸ் எரஸ்மஸ் மற்றும் ரொட் டக்கர் ஆகியோர் தங்களுடைய ஆறாவது டி-20 உலகக் கிண்ணத்தில் பணியாற்றவுள்ளனர்.

இதில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் நடுவராக செயல்பட்ட, இலங்கையின் குமார் தர்மசேன, ஓமான் மற்றும் பபுவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் நடுவராக செயற்படவுள்ளார். இவருடன் நியூசிலாந்தின் கிரிஸ் கெப்பனி கள நடுவராக செயற்படவுள்ளார்.

அதேநேரம், குறித்த போட்டியில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, சுப்பர் 12 சுற்றுக்கான முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளதுடன், போட்டியின் கள நடுவர்களாக மரைஸ் எரஸ்மஸ் மற்றும் அலிம் தார் ஆகியோர் செயற்படவுள்ளதுடன், மூன்றாவது நடுவராக கிரிஸ் பிரவ்ன், போட்டி மத்தியஸ்தராக டேவிட் பூன் ஆகியோரும் செயற்படவுள்ளனர்.

இதனிடையே, போட்டி அதிகாரிகள் முதல் சுற்று மற்றும் சுப்பர் 12 சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான அதிகாரிகள் விரைவில் அறிவிக்கப்படுவர் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

போட்டி மத்தியஸ்தர்கள் – டேவிட் பூன், ஜெப் கிரவ்ன், ரஞ்சன் மடுகல்ல, ஜவகல் ஸ்ரீநாத்

நடுவர்கள் – கிரிஸ் பிரவ்ன், அலீம் தார், குமார் தர்மசேன, மரைஸ் எரஸ்மஸ், கிரிஸ் கெப்பனி, மைக்கல் கோக், அட்ரைன் ஹோல்ட்ஸ்டொக், ரிச்சர்ட் இல்லிங்வத், ரிச்சர்ட் கெட்ல்பிரொக், நிதின் மேனன், அஷான் ரஷா,போல் ரீபெல், லங்டன் ரஸர், ரொட் டக்கர், ஜோல் வில்ஸன், போல் வில்ஸன்