July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகக் கிண்ண சக்கர நாற்காலி டென்னிஸ்: இலங்கை அணிக்கு ஆறாமிடம்!

இத்தாலியில் நடைபெற்ற உலகக் கிண்ண சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டித் தொடரில் 6 ஆவது இடத்தை இலங்கை அணி பெற்றுக்கொண்டது.

இதன்மூலம் உலக சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டித் தொடர் வரலாற்றில் இலங்கை பெற்ற சிறந்த பெறுபேறாக இது அமைந்துள்ளது.

16 அணிகள் பங்கேற்ற 8 ஆவது உலகக் கிண்ண சக்கர நாற்காலி டென்னிஸ் தொடரின் முதலாவது சுற்றில் முன்னாள் உலக சம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்தாடிய இலங்கை 0 – 3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

இதனையடுத்து நடைபெற்ற பெல்ஜியம் அணியுடனான போட்டியில் 2 – 1 என்ற செட் கணக்கிலும், பிரேசில் அணியுடனான போட்டியை 3 – 0 என்ற செட் கணக்கிலும் இலங்கை அணி வெற்றி கொண்டது.

இதனைத்தொடர்ந்து 5ஆம் இடத்திலிருந்து 8 ஆம் இடம்வரையான நிரல்படுத்தலுக்கான போட்டியில் போலந்தை எதிர்த்தாடிய இலங்கை 2 – 0 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றது.

இதன் பின்னர் 5 ஆம், 6 ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தலுக்கான இறுதிப் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட இலங்கை 0 – 2 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து 6 ஆவது இடத்தைப் பிடித்தது.

இம்முறை உலக சக்கர நாற்காலி டென்னிஸ் தொடரில் இலங்கை அணியின் தலைவராக அண்மையில் நிறைவுக்குவந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்குகொண்ட சுரேஷ் தர்மசேன செயல்பட்டதுடன், இந்த அணியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லசந்த ரணவீர, காமினி திஸாநாயக்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

6 ஆம் இடத்தைப் பெற்ற இலங்கை அணி வீரர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.