January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கால்பந்து அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய சனத்

Photo: Football Sri Lanka

மாலைதீவுகளில் தற்போது நடைபெற்று வருகின்ற தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணி வீரர்களுக்கு ஆதரவு வழங்க முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய முன்வந்துள்ளார்.

இதன்படி, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் மாலைதீவுகளில் இலங்கை கால்பந்து அணி வீரர்களை சனத் ஜயசூரிய செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளார்.

இதன்போது அவரது விளையாட்டு வாழ்க்கையின் சாதனைகள் மற்றும் அவற்றிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களை கால்பந்து வீரர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

அத்துடன், கால்பந்து மட்டுமல்ல, எந்த விளையாட்டிலும் அர்ப்பணிப்பும் ஆர்வமும் இருந்தால் வெற்றி பெறுவது மிகவும் இலகுவானது என்று சனத் ஜயசூரிய, வீரர்களுக்கு கூறியுள்ளார்.

இம்முறை தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுடனான போட்டியில் தோல்வியைத் தழுவியது.

எனவே, இலங்கை அணி வீரர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக சனத் ஜயசூரியவை அழைத்து இவ்வாறானதொரு சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின்போது இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், தலைமைப் பயிற்சியாளர், மற்றும் இலங்கை கால்பந்து அணியின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

அத்துடன், சனத் ஜயசூரியவுக்கு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவரினால் இலங்கை கால்பந்து அணியின் ஜேர்சி ஒன்று நினைவுப் பரிசாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை அணி, தமது 3 ஆவது போட்டியில் வியாழக்கிழமை இந்திய அணியை சந்திக்கவுள்ளது.

This slideshow requires JavaScript.