January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அபுதாபி டி-10 லீக்: டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணியில் விளையாடும் வனிந்து ஹஸரங்க

இந்த ஆண்டு நடைபெறவுள்ள அபுதாபி டி-10 லீக் தொடரில் இலங்கையின் இளம் வீரர் வனிந்து ஹஸரங்கவை டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணியில் தக்கவைத்துக்கொள்ள அந்த அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அபுதாபி டி-10 லீக் தொடர் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதனிடையே, ஐந்தாவது ‘அபுதாபி டி-10 லீக்’ தொடரின் வீரர்கள் ஏலம் ஒக்டோபர்  7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், குறித்த தொடரில் ஆடும் அணிகளில் ஒன்றான டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணி தமது வீரர் குழாத்தில் இலங்கையின் இளம் நட்சத்திர சகலதுறைவீரரான வனிந்து ஹஸரங்கவினை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதேநேரம் வனிந்து ஹஸரங்கவுடன் டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணி இங்கிலாந்தின் வேகப்பந்து சகலதுறைவீரரான டைமல் மில்ஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஷஹுர் கான் ஆகிய இருவரையும் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதாகவும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணியின் நட்சத்திர வீரராக மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகலதுறைவீரரான அன்ட்ரே ரசல் உள்ளார்.

உலக டி-20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள வனிந்து ஹஸரங்க தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற ஐ.பி.எல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.