Photo: Sam Curran/Twitter
ஐ.பி.எல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக டி-20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் சாம் கரண் விலகுவதாக அறிவித்துள்ளார்.
டி-20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில், காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் இளம் சகலதுறை வீரர் சாம் கரண் விலகுவதாக அறிவித்துள்ளார்.
தற்போது ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாம் கரண், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியின் போது முதுகு பகுதியில் காயமடைந்தார்.
இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக இன்னும் ஓரிரு தினங்களில் இங்கிலாந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
மேலும், சிகிச்சை முடிந்து அவரால் உலகக் கிண்ணத் தொடரில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர் டி-20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து சாம் கரணிற்குப் பதிலாக டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவரது சகோதரர் டொம் கரண் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காத இங்கிலாந்து வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் இன்று ஓமானின் தலைநகரம் மஸ்கட்டை வந்தடைந்தனர். இங்கிலாந்து வீரர்கள் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை ஓமானில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.