July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தெற்காசிய கால்பந்து தொடர்: நேபாளத்திடம் போராடித் தோற்றது இலங்கை

Photo: Twitter/ Football Sri Lanka

மாலைதீவுகளில் நடைபெறும் தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 3 – 2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இதனால், தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை அணி, இறுதிப் போட்டி வாய்ப்பை இழக்கும் நிலைமையை எதிர்கொண்டுள்ளது.

மாலேவில் உள்ள தேசிய கால்பந்து அரங்கில் நேற்று இரவு நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் நான்காவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் முதல் பாதியின் 33 ஆவது நிமிடத்தில் நேபாள அணியின் சுமன் லாமா அந்த அணிக்கான முதல் கோலை போட்டார்.

இதனால் முதல் பாதி ஆட்டம் நிறைவில் நோபாள அணி 1 – 0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 51 ஆவது நிமிடத்தில் அஞ்ஜான் பிஸ்தா அந்த அணிக்கான இரண்டாவது கோலை போட்டார்.

இந்த நிலையில், போட்டியின் 57 ஆவது நிமிடத்தில் இலங்கை வீரர் மார்வின் ஹமில்டன் இலங்கைகான முதலாவது கோலைப் போட்டார்.

இதனைத் தொடர்ந்து கோல் நிலையை சமப்படுத்த இலங்கை முயற்சித்த போதிலும் பந்து பரிமாற்றங்களில் ஏற்பட்ட தவறுகளால் அது கைகூடாமல் போனது.

எனினும், போட்டியின் 86 ஆவது நிமிடத்தில் டெஜ் தமாங் பரிமாறிய பந்தை முறையாக கட்டுப்படுத்தி, முன்னோக்கி நகர்ந்த அயுஸ் கலன் மிக இலாகவமாக பந்தை கோலினுள் புகுத்தி நேபாளத்தின் 3 ஆவது கோலைப் போட்டார்.

எவ்வாறாயினும், உபாதையீடு நேரத்தின்போது (94ஆவது நிமிடம்) கிடைக்கப்பெற்ற பெனால்டியை மற்றுமொரு இலங்கை வீரரான டிலொன் டி சில்வா கோலாக்கியபோதிலும் இறுதியில் இலங்கையினால் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போனது.

இதனால், நேபாளத்திடம் கடுமையாகப் போராடி 2 – 3 கோல்கள் அடிப்படையில் இலங்கை அணி தோல்வி அடைந்தது.

இந்தத் தோல்வியுடன் இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இப் போட்டியில் வெற்றிபெற்றதன்மூலம் அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் நேபாளம் முதலாம் இடத்தைப் பிடித்தது.

இதேவேளை, இலங்கை அணி, 3 ஆவது போட்டியில் இந்தியாவை எதிர்வரும் 7ஆம் திகதி சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.