Photo: Facebook/ Sachin Tendulkar
உலகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் ஊழல்களை வெளிப்படுத்திய ‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் முறைகேடாக கோடிகளில் முதலீடு செய்து சொத்துக்களை வாங்கி குவித்துள்ளவர்களின் பெயர் பட்டியலை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில் 91 நாடுகளைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில், குறித்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் நீரவ் மோடி உட்பட மொத்தம் 380 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி மற்றும் மாமனார் ஆனந்த் மேத்தா ஆகியோர் கரீபியன் தீவுகளில் உள்ள பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் இயங்கிய சாஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டை சச்சின் டெண்டுல்கர் தரப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குனர் மிரின்மோய் முகர்ஜி கூறுகையில்,
‘இந்த விவகாரத்தில் சச்சினின் முதலீடு சட்டபூர்வமானது. அந்த முதலீடு அவரது வருமானத்தில் இருந்தே செலுத்தப்பட்டுள்ளது. இதன் வரி முறையாக கணக்கிடப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட விபரங்கள் அனைத்தும் வெளிப்படையானவை. வரி செலுத்திய ஆவணங்கள் தெளிவாக இருப்பதால் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல எவ்வித குற்ற செயல்களிலும் சச்சின் ஈடுபடவில்லை’ என தெரிவித்துள்ளார்.