Photo: ipl/Twitter
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரின் பிளே-ஆப் சுற்றில் விளையாடுவதற்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மூன்றாவது அணியாக தகுதிபெற்றுள்ளது.
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 48ஆவது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி கிளென் மெக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக கிளென் மெக்ஸ்வெல் 58 ஓட்டங்களை எடுத்தார். பஞ்சாப் அணி தரப்பில் ஹென்றிக்ஸ், மொஹமட் ஷமி தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வார் அரைச் சதமடித்து கைகொடுத்தாலும், பின்வரிசை வீரர்களின் மோசமான ஆட்டத்தினால் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி திரில் வெற்றிபெற்று, இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
ஏற்கனவே சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தன.