Photo: Sri Lanka Football/ Facebook
தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
ஐந்து நாடுகள் பங்குபற்றும் 13 ஆவது தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடர் இன்று மாலைதீவுகளின் தலைநகர் மாலேவில் உள்ள தேசிய கால்பந்து அரங்கில் ஆரம்பமாகியது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.
போட்டியின் ஆரம்பம் முதல் இலங்கை வீரர்கள் தடுத்தாடும் உக்தியைக் கையாள, பங்களாதேஷ் அணி வீரர்கள் கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடியது.
எனினும், போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியின் 56ஆவது நிமிடத்தில் இலங்கை அணியின் பெனால்டி எல்லைக்குள் வைத்து, இலங்கை பின்கள வீரர் டக்சன் பியுஸ்லஸின் கையில் பந்து பட்டதாகக் கூறி, நடுவர் பங்களாதேஷ் அணிக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பை வழங்கினார்.
இதன்போது பியுஸ்லஸிற்கு போட்டியின் இரண்டாவது மஞ்சள் அட்டையும் காண்பிக்கப்பட்டது. எனவே, அவர் சிவப்பு அட்டையுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பங்களாதேஷ் அணியின் பார்மன் தோபு கோலக்கி தமது அணியை 1 – 0 என முன்னிலை பெறச் செய்தார்.
இதன்பின்னர் 10 வீரர்களுடன் விளையாடிய இலங்கை அணி, போராட்டத்தை கைவிடவில்லை.
எனினும், இலங்கை அணியினால் கோலுக்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியாமல் போனது. இதன்படி, போட்டி நிறைவில் பங்களாதேஷ் அணி 1-0 என வெற்றி பெற்றது.
இலங்கை அணி தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் 4 ஆம் திகதி நேபாளம் அணியினை எதிர்கொள்ளவுள்ளது.