October 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரீமியர் லீக் கால்பந்தாட்டம்: பெம்போர்டின் ஹெட்ரிக் கோலால் லீட்ஸ் வெற்றி

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் பெட்ரிக் பெம்போர்டின் ஹெட்ரிக் கோல் மூலம் அஸ்டன் விலா கழக அணிக்கு எதிரான போட்டியில் 3-0 எனும் கோல் கணக்கில் லீட்ஸ் கழக அணி வெற்றியை தன்வசப்படுத்தியது.

போட்டியில் முதல் பாதியில் இரண்டு அணிகளின் வீரர்களாலும் கோலடிக்க முடியவில்லை. அதற்கமைய முதல் பாதி ஆட்டம் கோலின்றியே முடிந்தது.

இரண்டாம் பாதியில் லீட்ஸ் அணி சார்பாக பெம்போர்ட் 55 ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டார். தொடர்ந்து அவர் 67 மற்றும் 74 ஆவது நிமிடங்களிலும் கோலடித்து வெற்றிபெறும் நம்பிக்கையை உருவாக்கினார்.

அஸ்டன் விலா கழக அணி வீரர்கள் கோல் போட பகீரதப் பிரயத்தனம் எடுத்த போதிலும் அவர்களின் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இறுதியில் 3-0 என வெற்றி லீட்ஸ் அணி வசமானது.

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்ட வரலாற்றில் பெட்ரிக் பெம்போர்ட் ஹெட்ரிக் கோலடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

புள்ளிகள் பட்டியலில் லீட்ஸ் அணி 6 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தில் உள்ளது.