November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வலிமையானவர்களின் ‘ஸ்ட்ரோங்மேன்’ விளையாட்டு இலங்கையில் அறிமுகம்

Photo: World Strongman Federation

உலகின் மிகவும் சக்திவாய்ந்த விளையாட்டுகளில் ஒன்றான ஸ்ட்ரோங்மேன் (Strongman) விளையாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலங்களில் உலகில் உள்ள 79 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்ட்ரோங்மேன் விளையாட்டு வேகமாக பரவியது.

மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த விளையாட்டை சர்வதேச அளவில் பிரபல்யப்படுத்துவதற்காக 2007 இல் உலக ஸ்ட்ரோங்மேன் சம்மேளனம் நிறுவப்பட்டது.

இந்த நிலையில், குறித்த விளையாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இலங்கை ஸ்ட்ரோங்மேன் தேசிய சம்மேளனம் அண்மையில் நிறுவப்பட்டுள்ளதுடன், இதன் முதலாவது பொதுக்கூட்டம் ஒக்டோபர் 3 ஆம் திகதி இணையவழி ஊடாக நடைபெற உள்ளது.

தேசிய உடற்கட்டழகர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பயிற்சியாளருமான கித்சிரி பெர்னாண்டோ இதன் தலைவராக உள்ளார்,

அதே நேரத்தில் இலங்கையின் சிரேஷ்ட வலிமை பயிற்சியாளரும், விளையாட்டு ஆலோசகருமான மோதிலால் ஜயதிலக ஸ்ட்ரோங்மேன் விளையாட்டின் தேசிய பயிற்சியாளராகவும் உள்ளார்.

இதில் சிறப்பு என்னவென்றால் ஆண்கள் மட்டுமல்ல, பெண் விளையாட்டு வீரர்களும் தேசிய மட்ட ஸ்ட்ரோங்மேன் விளையாட்டில் பங்குபற்ற முடியும்.

இதன்படி, எதிர்காலத்தில் பல உள்ளூர் போட்டிகள் நடத்தப்படும் என்றும், அதன்மூலம் பிராந்திய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க வீரர்களை ஊக்குவிக்கும் தமது குறிக்கோள் என தேசிய ஸ்ட்ரோங்மேன் சம்மேளனத்தின் செயலாளர் தினேஷ் ஜயசிங்க கூறினார்.