January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2021: சன்ரைசர்ஸை வீழ்த்தி முதல் அணியாக பிளே-ஒப் சுற்றில் நுழைந்தது சென்னை!

Photo: IPL

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிளே-ஒப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

ஐ.பி.எல் தொடரில் நடைபெற்ற 44 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் சென்னை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை மட்டுமே எடுத்தனர்.

சென்னை அணி தரப்பில் ஜோஸ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ, ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இதன்படி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய சென்னை அணி, 18 புள்ளிகளைப் பெற்று நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பிளே-ஒப் சுற்றுக்குள் நுழைந்தது.

இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் முதல் சுற்றுடன் சென்னை அணி வெளியேறியிருந்தாலும், இம்முறை முதல் அணியாக பிளே-ஒப் வாய்ப்பை உறுதி செய்தது.