Photo: IPL
டி-20 கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் 10 ஆயிரம் ஓட்டங்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரென் பொல்லார்ட் சாதனை படைத்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது லீக் போட்டி நேற்றுமுன்தினம் அபுதாபியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே-ஒப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
இந்த நிலையில், குறித்த போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த முன்னணி வீரரான கிரென் பொல்லார்ட் டி- 20 கிரிக்கெட்டில் மிகப் பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது பொல்லார்ட் வீசிய முதல் ஓவரிலேயே கிறிஸ் கெயில் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதன்மூலம் டி – 20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதுமாத்திரமின்றி, ஏற்கனவே டி- 20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் குவித்துள்ள பொல்லார்ட், டி- 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் வீரராக 10 ஆயிரம் ஓட்டங்கள் மற்றும் 300 விக்கெட்டுக்களை எடுத்தவர் எனும் சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.