July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விடைபெறும் டேவிட் வோர்னர்

Photo: IPL

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வோர்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக செயல்பட்டு வந்த டேவிட் வோர்னர், 2016 இல் அந்த அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுத்தார்.

ஐ.பி.எல் அரங்கில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் 5 ஆவது வீரராக உள்ள வோர்னர், அண்மைக்காலமாக மோசமான ‘போர்ம்’ காரணமாக தடுமாறி வருகிறார். இறுதியாக அவர் விளையாடிய 4 போட்டிகளில் 6, 57, 0, 2 ஓட்டங்களை எடுத்தார். அத்துடன், நேற்றுமுன்தினம் நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் சேர்க்கப்படவில்லை என்பதுடன், மைதானத்துக்கும் வரவில்லை.

எனவே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டேவிட் வோர்னர் கடந்த சில போட்டிகளில் விளையாடவில்லை. இந்த நிலையில் தன்னை இனி அணியில் பார்க்க முடியாது என்று டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, ராஜஸ்தான் அணியுடனான போட்டியின் போது, ரசிகர் ஒருவர் ‘யாராவது டேவிட் வோர்னரை பார்த்தீர்களா?’ என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள வோர்னர் ‘இனிமேல் என்னைப் பார்க்க முடியாமல் கூட போகலாம். எனினும், தொடர்ந்து எமது அணிக்கு ஆதரவு கொடுங்கள் என பதிவிட்டிருந்தார்.

இதனால் வோர்னர் இனி வரும் போட்டிகளில் இல்லாதது உறுதியாகியுள்ளதுடன், ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அவர் களமிறங்கமாட்டார் என தெரிய வந்துள்ளது.