July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் ஆட்டநிர்ணய சதி: இலங்கை வீரர் சச்சித்ரவின் சொத்து விபரங்கள் சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு

Photo: Facebook/Sachithra Senanayake

ஆட்டநிர்ணய சதி முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவின் சொத்து விபரங்கள் குறித்த அறிக்கை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனை விளையாட்டுத்துறை முறைகேடுகள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சச்சித்ர சேனாநாயக்கவின் சொத்து விபரங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியிடமிருந்தும் அறிக்கையொன்று பெறப்பட்டதாக கூறிய அவர், அவரது சொத்துக்கள் தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவிடம் இருந்தும் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சச்சித்ர சேனாநாயக்க தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகள் குறித்த கடிதக் கோவையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் காரணமாக அவரை இரண்டாவது விசாரணைக்கு அழைக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் டி- 20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணியின் இளம் கிரிக்கெட் வீரரொருவரை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட அழைப்பு விடுத்ததாக சச்சித்ர சேனாநாயக்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விளையாட்டுத்துறை முறைகேடுகள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி இது தொடர்பில் சச்சித்ர சேனாநாயக்க வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.