January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பதிலடியுடன் வெற்றியைத் தொடருமா பஞ்சாப்?

(Photo: BCCI/IPL)

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் லோகேஸ் ராகுலின் கிங்ஸ் இலவன் பஞ்சாப் மற்றும் டேவிட் வோனரின் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் துபாயில் விளையாடுகின்றன.

இவ்விரண்டு அணிகளும் இதற்கு முன்னர் மோதிய ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 69 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. என்றாலும், அன்றைய பஞ்சாப் அணியில் இடம்பெற்றிடாத கிறிஸ் கெய்ல் இன்று இடம்பெறுகின்றமை பஞ்சாப் அணிக்கு தைரியமளிக்கின்றது.

கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 10 ஆட்டங்களில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்திலும், ஹைதராபாத் அணி 10 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று ஐந்தாமிடத்திலும் இருக்கின்றன.

எனவே, இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றால் அது பிளே ஓவ் சுற்றுக்கான வாயிலாக அமையும். ஹைதராபாத் அணி வெற்றிபெற்றால் அவர்கள் அடுத்த ஆட்டங்களின் மீது நம்பிக்கை கொள்ள முடியும்.

எவ்வாறாயினும், ஹெட்ரிக் வெற்றியைப் பெற்ற பெருமையுடனேயே கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகின்றது. அணித்தலைவர் லோகேஸ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோரின் ஆட்டத்தை கண்டுகளிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

கடந்த ஆட்டங்களில் சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான் ஆகியோர் இன்றும் பிரகாசித்தால் பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். மயன்க் அகர்வால், கிளென் மெக்ஸ்வெல் ஆகியோரும் அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.

சூப்பர் ஓவரில் அபாரமாக பந்துவீசிய மொஹமட் சமியும் பஞ்சாப் அணியைப் பலப்படுத்துகின்றார்.

மறுபக்கம் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு தலைவர் டேவிட் வோனர் மிகப்பெரும் நம்பிக்கையாக இருக்கின்றார். அவருடன் ஜொனி பெயார்ஸ்டோ, மனிஸ் பாண்ட்டே, கேன் வில்லியம்ஸன் போன்ற ஓட்டங்களை விளாசித்தள்ளும் வீரர்களும் இருக்கவே செய்கினறனர்.

ஆனால், இவர்கள் எல்லோரும் கடந்த சில ஆட்டங்களில் ஒருமித்து பிரகாசிக்காததே அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியாகவுள்ளது. அந்தக் குறையை நிவர்த்தி செய்து விளையாடியால் நிச்சயமாக ஹைதராபாத் அணியால் சவால் விடுக்க முடியும்.

உலகப்புகழ் சுழல் பந்துவீச்சாளரான ரஸிட் கான், சன்ரைசஸ் அணியில் இடம்பெற்றுள்ளமை எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலாகும். அவருக்கு ஏனைய வீரர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பஞ்சாப் அணியை குறைந்த ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த முடியும்.