July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லங்கா பிரீமியர் லீக்கில் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பில் ஆலோசனை

இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவது சம்பந்தமாக இலங்கை கிரிக்கெட் சபை கவனம் செலுத்தியுள்ளது.

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஐந்து அணிகள் மோதும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது பருவகால போட்டிகள், 2020 ஆம் ஆண்டைப் போன்றே ஒரே மைதானத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இம்முறை லங்கா பிரீமியர் லீக்கில் போட்டிகளை நேரில் பார்வையிட 25 வீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் சபையின் மருத்துவப் பிரிவு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் மருத்துவப் பிரிவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கருத்து வெளியிடுகையில்,

எமது ரசிகர்களை இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்வதற்கு உற்சாகப்படுத்தவேண்டும். அவ்வாறு இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றிருந்தால், லங்கா பிரீமியர் லீக் போட்டிகளைப் பார்வையிட மைதானத்துக்கு 25 வீத ரசிகர்களை அனுமதிக்க முடியும்.

தற்போதைய நிலையில், நாட்டில் 54  வீத பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதங்களில் இந்த வீதம் 70 தொடக்கம் 75  வீதம் வரையில் அதிகரிக்கப்படலாம். சுகாதார அமைச்சின் அனுமதியுடன் ரசிகர்களுக்கு மைதானத்துக்கு சென்று போட்டிகளைப் பார்வையிட முடியும் என்றார்.

அதேநேரம், அடுத்து நடைபெறவுள்ள அனைத்து தொடர்களுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட ரசிகர்களை மாத்திரம் அனுமதிப்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றோம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.