தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவுகள், நேபாளம் ஆகிய ஐந்து நாடுகள் பங்குபற்றும் 13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து 16 ஆம் திகதி வரை மாலைதீவுகளில் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான 23 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
சுஜான் பெரேரா தலைமையிலான இலங்கை அணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதன்படி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டக்சன் பியுஸ்லஸ், ஜூட் சுபன் ஆகிய இருவரும் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த இரண்டு வீரர்களும் இறுதியாக நடைபெற்ற 2022 உலகக் கிண்ண கால்பந்து தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை அணியிலும் இடம்பெற்றிருந்தனர்.
இது இவ்வாறிருக்க, நீண்ட இடைவெளியின் பிறகு இலங்கை கால்பந்து அணியில் மன்னாரைச் சேர்ந்த எடிசன் பிகுராடோ இடம்பிடித்துள்ளார். இவர் பெல்லிகன்ஸ் கழகத்துக்காக விளையாடி வருகின்ற வீரர் ஆவார்.
இதேநேரம், அறிவிக்கப்பட்ட இலங்கை குழாத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் முஸ்தாக் மற்றும் ரிப்கான் மொஹமட் ஆகிய இரண்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை இலங்கை எதிர்த்தாடும்.
அதனைத் தொடர்ந்து ஆரம்ப விழா வைபவம் உத்தியோகபூர்வமாக நடத்தப்பட்டதன் பின்னர் மாலைதீவுகளுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான போட்டி நடைபெறும்.
இலங்கை தனது 2 ஆவது போட்டியில் நேபாளத்தை அக்டோபர் 4 ஆம் திகதியும் 3 ஆவது போட்டியில் இந்தியாவை 7 ஆம் திகதியும் கடைசிப் போட்டியில் மாலைதீவுகளை 10 ஆம் திகதியும் எதிர்த்தாடும்.
லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அக்டோபர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடும்.
இலங்கை அணி:
சுஜான் பெரேரா (அணித் தலைவர்), ருவன் அருணசிறி, கவீஷ் லக்ப்ரிய பெர்னாண்டோ, ஹர்ஷ பெர்னாண்டோ, ரொஷான் அப்புஹாமி, சமோத் டில்ஷான், சரித்த ரத்நாயக்க, டக்சன் பியுஸ்லஸ், மர்வின் ஹமில்டன், சலன சமீர, ஜூட் சுபன், மொஹமட் முஸ்தாக், மொஹமட் பஸால், மொஹமத் சிபான், கவிந்து இஷான், டிலொன் டி சில்வா, வசீம் ராஸீக், மொஹமட் ஆகிப், அசிக்கூர் ரஹ்மான், சுப்புன் தனஞ்சய, ரிப்கான் மொஹமட், அமான் பைஸர், எடிசன் பிகுராடோ