November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி- 20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்து விராத் கோலி புதிய சாதனை

Photo: IPL

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நேற்று (26) நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணித்தலைவர் விராத் கோலி டி- 20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து புதிய சாதனை படைத்தார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று டுபாயில் நடைபெற்ற 39 ஆவது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 54 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோஹ்லி 51 ஓட்டங்கள் எடுத்தார். இதில், ஜஸ்பிரித் பும்ரா வீசிய 4 ஆவது ஓவரில் பந்தை சிக்ஸருக்கு அடித்து 13 ஓட்டங்களைக் கடந்த போது, டி-20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை (சர்வதேச- உள்ளூர், டி-20 லீக் போட்டிகள்) கடந்து புதிய சாதனை படைத்தார்.

மேலும், டி- 20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் இந்தியர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்த மைல்கல்லை எட்டிய 5 ஆவது சர்வதேச வீரரானார். இதுவரை 314 போட்டிகளில் , 5 சதங்கள், 74 அரைச் சதம் உட்பட 10,038 ஓட்டங்களை கோஹ்லி எடுத்துள்ளார். ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் (14,275 ரன்), கிரென் பொல்லார்ட் (11, 195), பாகிஸ்தானின் சொஹைப் மலிக் (10,808), அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் (10, 019) இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.