அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ள டி- 20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மஹேல ஜயவர்தனவுக்கு தேர்வுக் குழு கூட்டங்களில் கலந்து கொள்ள தகுதியானவர் என்று இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
டி – 20 உலகக்கிண்ண அணி ஏற்கனவே தேர்வாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மஹேலவுக்கு எதுவும் செய்ய முடியாது. ஆனால், போட்டிக்கான இறுதிப் பதினொருவரை தேர்ந்தெடுப்பதில் மஹேலவின் பங்கு பற்றுதல் நிச்சயம் இருக்கும்.
மஹேல தற்போது அதிகாரபூர்வமாக இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளதுடன், அவரது அறிவு மற்றும் நிபுணத்துவம் போட்டி உத்திகளை கையாள்வதற்கு பயன்படுத்தப்படும். இதனால் அவர் டி- 20 உலகக் கிண்ணத்தின் போது தேர்வுக் குழு கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.
இதில் மஹேல ஜயவர்தனவுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்றாலும், அவருடைய விருப்பம் நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.
மஹேலவின் நியமனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு மஹேல தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புகின்றார். அதேபோல, இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கு அவரது பங்களிப்பு கிடைக்க வேண்டும் என்பதால் இலங்கை கிரிக்கெட் அணியுடன் நீண்டகாலம் இருக்குமாறு அவருக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை என அவர் மேலும் கூறினார்.
இலங்கை கிரிக்கெட்டின் இயக்குனராக உள்ள டொம் மூடி, கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இலங்கை அணியின் ஆலோசகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.