Photo: ICC
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் மொயின் அலி அறிவித்துள்ளார்.
34 வயதாகும் மொயின் அலி, இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 5 சதங்களுடன் 2914 ஓட்டங்களை குவித்துள்ளார். மேலும், 195 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடி வருகின்ற அவர், இறுதியாக நடைபெற்ற இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரின் போது இங்கிலாந்து அணியின் உப தலைவராகவும் செயல்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஐ.பி.எல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் மொயின் அலி, டி- 20 உலகக் கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பெற்றுள்ளார்.
இது இவ்வாறிருக்க, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மொயின் அலி இன்று (27) அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக தொடர்ந்து விளையாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகள் படைத்துள்ள மொயின் அலி, கடந்த 2016 ஆம் ஆண்டில் 4 டெஸ்ட் சதங்களை எடுத்துள்ளார். இது தவிர 2017 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
மேலும், கடந்த 2018-19 சீசனில் நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 6 டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளை மொயின் அலி வீழ்த்தியிருந்தார்.
இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடருக்கு முன் மொயின் அலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருப்பது அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.