இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ள குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு பரிசீலனையின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் உப தலைவர் குசல் மெண்டிஸ், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க மற்றும் விக்கெட் காப்பு – துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓராண்டு போட்டித் தடை மற்றும் தலா ஒரு கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய இருவரும் அண்மையில் இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்திற்குச் சென்று கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர்.
இதன்போது, தமக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக் காலத்தை குறைத்து மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், அவர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட தண்டனைப்படி மனநல மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று, மீண்டும் வழமைக்கு திரும்பும் பட்சத்தில், எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள லங்கா பீரிமியர் லீக் போட்டிகளில் வாய்ப்பளிப்பது குறித்து ஆராய்வதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.