
Photo: Sri Lanka Cricket
இலங்கை அணியின் பயிற்சியாளராக தன்னை நியமிக்க விரும்பினால், அதுதொடர்பில் ஆராய்ந்து பார்ப்ப்பதற்கு தான் தயாராக இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஒரு குறுகியகால சந்தோஷத்துக்காக தன்னுடைய கழுத்தை வைக்க எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள மாலிங்க, கிரிக்கெட் விளையாட்டில் யாரேனும் என்மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடிக் கொடுக்க தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற எல்லா தவறுகளையும் தன்மீது சுமத்துவதற்கு முயற்சிப்பதை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கிரிக்கெட் வீரர்களுக்கு அல்லது யாருக்காவது வேறு எந்த தொழிலையும் கற்றுக்கொடுக்க சிறிது காலம் தேவை என தெரிவித்துள்ள அவர், டி-20 உலகக் கிணணத்துக்கு முன் பத்து நாட்கள் வீரர்களுக்கு பயிற்சியளிப்பதால் பெரிதாக எதையும் செய்ய முடியாது என்றும் கூறினார்.
மேலும், இலங்கை கிரிக்கெட் சபையும், தேர்வுக் குழுவும் தங்களுக்கு எது சிறந்தது என்று நினைக்கிறார்களோ அதைச் செய்வதாகவும், அவர்களைப் போல தானும் சிறந்ததை மாத்திரமே செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அவர்கள் யாரிடமும் தான் கோபப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமின்றி, யாருக்கும் உதவ வேண்டிய அவசியமில்லை என்றும், அதிகாரப்பூர்வமாக நியமனக் கடிதத்துடன் பயிற்சியாளர் பதவியை இலங்கை கிரிக்கெட் சபை எனக்கு ஒப்படைத்தால் அது குறித்து ஆராய்ந்து பார்ப்பதாகவும் மாலிங்க கூறினார்.