July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2021: நடராஜனுக்குப் பதிலாக களமிறங்கும் காஷ்மீர் சகலதுறை வீரர்

Photo: Sunrisers Hyderabad Twitter

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் தங்கராசு நடராஜனுக்கு மாற்று வீரராக ஜம்மு காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் 14 வது சீசனின் இரண்டாம் பாதி போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த புதன்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடின.

இந்த நிலையில், போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவரும், அவருடன் தொடர்பில் இருந்த 6 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இருப்பினும் திட்டமிட்டபடி அன்றைய தினம் போட்டி நடைபெற்றது.

இதனிடையே, டி.நடராஜனுக்கு மாற்று வீரராக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் உம்ரான் மாலிக் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் சன்ரைசர்ஸ் அணியின் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றிருந்தார். தற்போது குறுகியகால கொரோனா மாற்று வீரராக அந்த அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

உம்ரான் மாலிக் இதுவரையில் ஒரு லிஸ்ட் ஏ போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டியில் மாத்திரமே விளையாடியிருந்தார். குறித்த ஒரு டி-20 போட்டியில், உம்ரான் மலிக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதேவேளை, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி, இதுவரையில் விளையாடிய 8 போட்டிகளில், ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளதுடன்,  இரண்டு புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.