January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமனம்

இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணி என்பவற்றின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

தற்போது ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன செயற்பட்டு வருகின்றார்.

ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பின்னர், இரண்டு நாட்களில் ஆரம்பமாகவுள்ள டி-20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியுடன் நேரடியாக அவர் இணைந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை மஹேல ஜயவர்தன இலங்கை அணியின் ஆலோசகாராக இணைந்துகொண்டு இலங்கை வீரர்களுக்குத் தேவையான அறிவுரைகளைப் பெற்றுக்கொடுப்பார் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த வருட முற்பகுதியில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியின் ஆலோசகராகவும் மஹேல ஜயவர்தன செயல்படுவார் என எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் ஆலோசகராக ஐந்து மாதங்களுக்கு தனது சேவையை இலவசமாக வழங்குவதற்கு மஹேல ஜயவர்தன முன்வந்துள்ளதாகவும் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த டி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழு முன்வைந்த பரிந்துரைக்கு அமைய மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.