July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல்.லில் ஒரு அணிக்கு எதிராக 1,000 ஓட்டங்கள்: ரோகித் சர்மா புதிய சாதனை!

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக 1000 ஓட்டங்களை குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

அபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 34 ஆவது லீக் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணித் தலைவர் இயென் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முன்னதாக சென்னை அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 30 ஆவது லீக் போட்டியில் உபாதை காரணமாக விளையாடாத மும்பை அணியின் தலைவர் ரோகித் சர்மா, இந்த போட்டியில் களமிறங்கினார்.

இந்த போட்டியில் ரோகித் சர்மா 33 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தாலும், 18 ஓட்டங்களை கடந்த போது ஐ.பி.எல் கிரிக்கெட்டில் புதிய சாதனையொன்றை அவர் நிகழ்த்தினார்.

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக 1000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ரோஹித் சர்மாவிற்கு அடுத்தபடியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டேவிட் வோர்னர் பஞ்சாப் அணிக்கு எதிராக 943 ஓட்டங்கள் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 915 ஓட்டங்களைக் குவித்துள்ளார். ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோலி டெல்லிக்கு எதிராக 909 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இதேவேளை, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, ராகுல் திரிபாதி மற்றும் வெங்கடேஷ் ஐய்யர் ஆகிய இருவரதும் அரைச் சதங்களின் உதவியால் 15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ஐ.பி.எல் இரண்டாம் பாதி ஆட்டத்தில் மும்பை அணி சந்தித்த இரண்டாவது தோல்வி இதுவாகும். அதேபோல கொல்கத்தா அணி பதிவு செய்த இரண்டாவது வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.