November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆஷஸ் தொடர்: “இங்கிலாந்து வீரர்களின் குடும்பங்களை அனுமதிக்க பரிசீலனை செய்வேன்”; ஆஸி. பிரதமர்

Photo: Boris Johnson Twitter

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களின் குடும்பங்களை அவுஸ்திரேலியா செல்ல அனுமதிக்குமாறு அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜொன்சன் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், அவுஸ்திரேலியாவில் உள்ள கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை எளிதாக்க உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

எவ்வாறாயினும், இங்கிலாந்து வீரர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர், அவர்களது குடும்பங்களை அனுமதிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 8 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது. ஐந்து டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரானது அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில்  நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இங்கிலாந்து அணியின் பல வீரர்கள் ஆஷஸ் தொடரில் விளையாடுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, 2021-22 ஆஷஸ் தொடரின் எதிர்காலம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசனை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது, ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை என்பன குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இதில் இங்கிலாந்து வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை  தளர்த்தவும், வீரர்கள் தங்கள் குடும்பங்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்வதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் பிரித்தானிய பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகளை நான் அவுஸ்திரேலிய பிரதமரிடம் முன்வைத்தேன். அதற்கு அவர் இங்கிலாந்து வீரர்களின் குடும்பங்களுக்கு தன்னால் முடிந்ததைச் செய்யப் போவதாக  கூறினார்.

இதேவேளை, பிரித்தானிய பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,

ஆஷஸ் தொடர் முன்னோக்கி செல்வதை நான் விரும்புகிறேன். ஆனால் இங்கிலாந்து வீரர்களின் குடும்பங்களுக்கு தனியாக சிறப்பு ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை. திறமையான தொழிலாளர்களிடமோ அல்லது மாணவர்களிடமோ பெரிய வித்தியாசத்தை நான் காணவில்லை. நீங்கள் கட்டாயம் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட பிறகுதான் அவுஸ்திரேலியாவுக்கு வர வேண்டும்.

ஆகவே, ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து வீரர்களின் குடும்பங்களை அனுமதிப்பது தொடர்பில் என்னால் முடியுமானதை செய்வேன் என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் பிரத்தியேகமான முறையில் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் ஆஷஸ் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.