November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது அத்தியாயம் நடைபெறும் திகதி அறிவிப்பு

லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடரின் இரண்டாவது அத்தியாயம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான வெளிநாட்டு வீரர்கள் பதிவு நாளை (24) முதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.srilankacricket.lk இணையத்தளத்துக்கு சென்று வெளிநாட்டு வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பதிவு செய்யப்பட்ட அனைத்து வீரர்களும் அண்மைக்கால திறமைகளின் அடிப்படையில் வீரர்கள் வரைவில் (Draft) சேர்க்கப்படுவார்கள்.

அதேபோல, அந்தந்த நாடுகளின் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது முதல்தர கிரிக்கெட்டில் விளையாடியிருக்க வேண்டும் அல்லது டி-20 உரிமம் சார்ந்த (Franchise) கிரிக்கெட்டில் பங்கேற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை லங்கா பிரீமியர் லீக்கில் 5 அணிகள் பங்குபற்றவுள்ளதுடன், ஒவ்வொரு அணிகளும் தலா 20 வீரர்களை தெரிவு செய்ய முடியும். அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற வீரர்களில் 14 பேர் உள்ளூர் வீரர்களாகவும், 6 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் உள்ளூர் வீரர்களுக்கான பெயர்களை இலங்கை தேர்வாளர்களினால் போட்டி ஏற்பாட்டுக் குழுவுக்கு வழங்கப்படவுள்ளதுடன், இதில் இலங்கை தேசிய அணி வீரர்களுடன் இலங்கை A அணி, இலங்கை வளர்ந்துவரும் அணி மற்றும் கழக மட்ட வீரர்களும் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜுலை மாதம் 29 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடர் நடைபெற இருந்தது.

எனினும், குறித்த காலப்பகுதியில் சர்வதேச போட்டித் தொடர்கள் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக், ஐ.பி.எல் தொடர்கள் நடைபெற்றதால் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக டிசம்பர் வரை லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடரை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.