July 1, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அதிரடி நீக்கம்

Photo: Afghanistan Cricket Board Twitter

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயல்பட்டு வந்த ஹமீது ஷின்வாரி அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரத்தையும் மீண்டும் கைப்பற்றி உள்ள தலிபான்கள் அங்கு பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக அஸீஸுல்லாஹ் பாஸில் நியமிக்கப்பட்டார்.

எனினும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஹமீது ஷின்வாரி செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, தலிபான்களின் கூட்டாளிகளான ஹக்கானிகள் திடீரென நேற்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தலைமையகத்துக்கு சென்று அவரை அந்த பதவியிலிருந்து அதிரடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக ஹமீது ஷின்வாரி பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

தலிபான்களின் கூட்டாளிகளான ஹக்கானி அமைப்பைச் சேர்ந்த அனாஸ் ஹக்கானி கிரிக்கெட் சபைக்கு வருகை தந்தார். அவர் என்னிடம், இனிமேல் நான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி இல்லை என்று கூறி சென்றார் எனப் பதிவிட்டிருந்தார்.

ஆனால், சில மணி நேரத்திலேயே அவரது பேஸ்புக் பதிவு அழிக்கப்பட்டது. பின்னர் அந்த பேஸ்புக் பக்கமே முடக்கப்பட்டது.

இதற்கிடையில் ஆப்கன் கிரிக்கெட் சபையின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக நஸீபுல்லா ஹக்கானி என்ற நஸீப் கான் நியமிக்கப்படுவதாக ஹக்கானி குழுமம் அறிவித்துள்ளது.

நஸீப் கான் முதுகலை பட்டம் பெற்றவர், கிரிக்கெட் பற்றியும் அறிந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.