இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு முற்பகுதியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.
இந்த நிலையில், இரண்டு நாடுகளுடனும் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது.
பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதலாவது டி-20 போட்டி சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது. அதன் பின்னர் பிரிஸ்பேன், குவீன்ஸ்லாந்து, அடிலெய்ட் மற்றும் மெல்பேர்னில் முறையே பெப்ரவரி 13, 15, 18, 20 ஆகிய திகதிகளில் அடுத்த நான்கு டி-20 போட்டிகளும் நடைபெறவுள்ளது.
இறுதியாக 2019 இல் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இலங்கை அணி விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய தொடர் நிறைவடைந்து 5 நாட்களுக்கு பிறகு இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் டி-20 தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் மார்ச் முதலாம் திகதி வரை பெங்களூரில் நடைபெறும். இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 5 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை மொஹாலியில் நடைபெறும்.
தொடர்ந்து மூன்று டி-20 போட்டிகள் மொஹாலி, தரம்சாலா மற்றும் லக்னோவில் மார்ச் 13, 15, 18 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.
இறுதியாக இலங்கை அணி 2017 இல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரிலும், 2020 இல் ஒருநாள் மற்றும் டி-20 தொடரிலும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.