November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை நிராகரித்த மஹேல

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கையின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார்.

எதிர்வரும் டி.20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளதால் பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் விலகுவார் என தெரிகிறது.

இதனால் இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை  தேர்வு செய்யும் முனைப்பில் பி.சி.சி.ஐ களமிறங்கியுள்ளது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி,முன்னாள் வீரர்களான வி.வி.எஸ்.லக்ஷ்மண் அல்லது அனில் கும்ப்ளே ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இலங்கையின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தனவை நியமிப்பது தொடர்பில் பி.சி.சி.ஐ பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், மஹேல இந்த கோரிக்கையை ஏற்கவில்லையாம் ஏற்கனவே, வேலைகள் அதிகம் இருக்கிறது. தற்போதுள்ள பொறுப்புகளே போதும் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

இலங்கை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு மட்டுமே பயிற்சியாளராக இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன செயல்பட்டு வருவதுடன்,அவரது பயிற்சியின் கீழ் மும்பை அணி 5 தடவைகள் சம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.