July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நான் மீண்டும் இலங்கை அணியில் விளையாட மாட்டேன்”; லசித் மாலிங்க

ஒரு வீரராக இலங்கை கிரிக்கெட் அணிக்கு இனி ஒருபோதும் திரும்ப மாட்டேன் என்று லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை அணியின் பயிற்சியாளராக இணைந்துகொள்ள தனக்கு உத்தியோகப்பூர்வமாக எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க கடந்த வாரம் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து மாலிங்கவை மீண்டும் டி-20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியுடன் இணைந்துகொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேபோல, ஓய்வுபெற்ற மாலிங்கவை இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் லசித் மாலிங்க கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தான் இனி இலங்கை அணியில் இணைய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

”இலங்கை அணிக்கு பயிற்சியளிக்கும் படி எனக்கு எந்தவொரு அழைப்பும் கிடைக்கவில்லை. ஊடக செய்திகள் மூலமே நான் இதுபற்றி அறிந்துகொண்டேன். இதனால் இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று கூறியுள்ளார்.

”அதேபோல, மீண்டும் கிரிக்கெட் விளையாட எனக்கு பைத்தியம் கிடையாது. நான் அவ்வாறான விடயங்களை செய்வதில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அத்துடன், இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பது தொடர்பிலும் யோசிக்க வேண்டும்.” என்றும் மாலிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் எனக்கு நேரம் தேவை. அத்தகைய அழைப்பு வந்தால் அதனை பரிசீலிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.