July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வீரர்கள் மீதான சூதாட்ட புகாரை மறுத்தது இலங்கை கிரிக்கெட் சபை

தென்னாபிரிக்க அணியுடனான டி-20 தொடரின் போது இலங்கை அணியின் எந்தவொரு வீரரும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொண்ட தென்னாபிரிக்க  அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான போட்டி தொடரின் போது இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கையின் பிரபலமான ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கையின் துடுப்பாட்ட வீரர் ஒருவரும் ,சுழற்பந்து வீச்சு வீசும் சகலதுறை ஆட்டக்காரர் ஒருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை விசேட அறிக்கை ஒன்றை இன்று (16) வெளியிட்டிருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமைத்துவக் குழு மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வீரர்கள் என எந்த வீரர்கள் பற்றியும் முறைப்பாடுகளை வழங்கியிருக்கவில்லை.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினை 2-1 என வெற்றி பெற்ற அதே அணியே, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி-20 தொடரிலும் விளையாடியிருந்தது.

அண்மைய நாட்களில், முக்கியமான கிரிக்கெட் தொடர்களில் வெற்றி பெற்று சரியான பாதையொன்றில் பயணிக்க ஆரம்பித்திருக்கும் இலங்கை அணியின் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது, இலங்கை அணியின் டி-20 உலகக் கிண்ண தயார்படுத்தல்களை பாதித்து, வீரர்களின் மனநிலைக்கும் அது பங்கமாக அமையும்.

இலங்கை கிரிக்கெட் சபை இவ்வாறான பொய் பிரசாரங்களை பரப்பும் செய்தி நிறுவனங்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது தொடர்பிலான எதுவிதமான ஆதாரங்களும் இல்லை எனவும் இலங்கை கிரிக்கெட் சபை சூதாட்டம் குறித்ததான கருத்துகளை மறுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.