இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய பணிகளை பொறுப்புடன் செயற்படுத்தும் பட்சத்தில் மாத்திரமே சாதகமான முடிவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என அணித்தலைவர் தசுன் ஷானக தெரிவித்தார்.
அதேபோல, இலங்கை அணியின் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் துடுப்பாட்ட வீரர்கள் தான் ஏற்கவேண்டும் என அவர் கூறினார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, தொடரை
3-0 என இழந்தது.
இந்த நிலையில், போட்டியை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, தசுன் ஷானக இவ்வாறு தெரிவித்தார்.
ஒவ்வொரு துடுப்பாட்ட வீரரும் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்தால் மாத்திரமே அவர்களுடைய பணிகளை சரியாக செய்ய முடியும். முதல் ஆறு ஓவர்கள், அடுத்து 10 ஓவர்கள் மற்றும் 10 ஓவர்களிலிருந்து 15 ஓவர்கள் என அணிக்காக திட்டங்கள் உள்ளன.
ஆனால், இந்த திட்டங்கள் சரியாக செயற்படுத்தப்படவில்லை. எனினும், இந்த தவறுகளை திருத்திக் கொள்வதற்கு முடியாமல் இல்லை. அதற்கான சரியான வீரர்களும் எம்மிடம் உள்ளனர். எனவே, உலகக் கிண்ணத்துக்கு செல்வதற்கு முதல் இந்த தவறுகளை திருத்திக் கொள்வது அவசியமாகும்.
அத்துடன், இந்த தொடரில் அமைக்கப்பட்ட ஆடுகளம் பந்துவீச்சுக்கு அதிகமாக சாதக தன்மையை கொண்டிருந்தமையால், ஓட்டங்களை பெறுவதற்கு கடினமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.