July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யோக்கர் ஜாம்பவான் லசித் மாலிங்கவுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து

கிரிக்கெட் உலகின் யோக்கர் ஜாம்பவான் லசித் மாலிங்க அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக நேற்று (14) அறிவித்தார்.

இது தொடர்பில் தமது யூடியூப் சமூக வலைத்தளத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்த அவர், இலங்கை கிரிக்கெட்டுக்கு இனிமேலும் தனது பங்களிப்பு தேவைப்படாது என்பதால் இந்த ஓய்வு முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், லசித் மாலிங்க கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகிய இருவரும் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

17 வருடங்களுக்கும் மேலாக இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி இலங்கைக்கு பல்வேறு வெற்றிகளை கொண்டு வந்து நாட்டின் பெயரை உலக அரங்கில் ஒலிக்க வைத்த சிறந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு அவருடைய ஓய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பிரதமர் வெளியிட்டிருந்த வாழ்த்துச் செய்தியில்,

17 வருடங்களாக இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, தாய்நாட்டிற்கு பல வெற்றிகளை  கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த லசித் மாலிங்கவுக்கு நல்லதொரு ஓய்வுக்காக வாழ்த்துகிறேன். லசித் மாலிங்கவின் இணையற்ற திறமை சிங்கக் கொடியை கிரிக்கெட் உலகின் உயரத்திற்கு உயர்த்துவதற்கு பெரும் பங்களிப்பை வழங்கியதை நான் பெருமையுடன் நினைவு கூர்கிறேன்.உங்கள் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, லசித் மாலிங்கவின் ஓய்வு குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள், இன்னாள் வீரர்களைப் போல வெளிநாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.