இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, மஹேல ஜயவர்தனவின் ஒத்துழைப்பை பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மஹேல ஜயவர்தன தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருவதுடன், அவரது பயிற்சியின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று தடவைகள் ஐ.பி.எல் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
அத்துடன், அண்மையில் நிறைவுக்கு வந்த த ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சதர்ன் பிரேவ் அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே, மஹேல ஜயவர்தன, லீக் கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
இது இவ்வாறிருக்க, அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள டி-20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள பல அணிகள் அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர்களை தங்கள் அணிக்கு ஆலோசகர்களாக நியமித்துள்ளன.
இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, தென்னாபிரிக்க அணியின் ஆலோசகராக ஜே.பி டுமினி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.