
Photo: Pakistan Cricket Twitter
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக அவர் பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் பதவிக்கு ரமீஸ் ராஜாவை பாகிஸ்தான் பிரதமரும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை போஷகருமான இம்ரான் கான், கடந்த ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்திருந்தார்.
இதற்கு அமைய பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 36 ஆவது தலைவராக ரமீஸ் ராஜா தெரிவாகியுள்ளார்.
மேலும் இஜாஸ் பட், ஜாவேத் புக்ரி, அப்துல் ஹபீஸ் கர்தார் ஆகியோருக்குப் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக தெரிவாகியுள்ள நான்காவது முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா ஆவார்.
1992 இல் இம்ரான் கான் தலைமையில் உலகக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணியில் அங்கம் வகித்த ரமீஸ் ராஜா, 1984 முதல் 1997 வரையான 13 ஆண்டுகள் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்தார்.
அதன்பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வந்த அவர், 2003/04 காலப்பகுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.