
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் குழாத்தின் உறுப்பினராக இலங்கையின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவை நியமிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
லசித் மாலிங்க போன்ற அனுபவமிக்க வீரரொருவரின் ஆலோசனைகள் இலங்கை அணியில் தற்போதுள்ள இளம் வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்த அவர், மாலிங்க போன்ற பெறுமதியான வளத்தை இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்காக பயன்படுத்துவது இலங்கை கிரிக்கெட் சபையின் கடமை எனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் மாலிங்கவுடன் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அடுத்து வரும் நாட்களில் இது குறித்து அவருடன் இலங்கை கிரிக்கெட் சபை பேச்சுவார்த்தை நடத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத மாலிங்கவை, பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்க பல வெளிநாட்டு அணிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
38 வயதான லசித் மாலிங்க, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், டி-20 போட்டிகளில் விளையாடி வருகின்றார். இதுவரை 30 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 84 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 101 டெஸ்ட், 338 ஒருநாள் மற்றும் 107 டி-20 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.