(Photo: BCCI/IPL)
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இதனால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பிளே ஒவ் சுற்று வாய்ப்பு சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஒரு கட்டத்தில் 86 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது.
எனினும், அடுத்த 50 ஓட்டங்களைப் பெறுவதற்குள் 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களைப் பெற்றது.
சஞ்சு சம்ஸன் 36 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். ஏனைய வீரர்களால் பெரிதாகப் பிரகாசிக்க முடியவில்லை.
ஜேஸன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஸிட் கான், விஜய் சங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெற்றி இலக்கான 155 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 4 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அணி தலைவர் டேவிட் வோனர் நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜொனி பெயார்ஸ்டோவும் குறைந்த ஓட்டங்களுடன் நடையைக் கட்ட ஹைதராபாத் அணியின் நிலை பரிதாபமானது.
ஆனாலும், தயங்காமல் விளையாடிய மனிஸ் பாண்ட்டே மற்றும் விஜய் சங்கர் ஜோடி அபாரமாகத் துடுப்பெடுத்தாடி இரண்டாம் விக்கெட்டுக்காக 93 பந்துகளில் 140 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
மனிஸ் பாண்ட்டே 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 83 ஓட்டங்களையும், விஜய் சங்கர் 52 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.
சன்ரைசஸ் அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.
இந்த வெற்றியானது சன்ரைசஸ் அணி பெற்ற நான்காவது வெற்றியாகும். இதற்கமைய சன்ரைசஸ், கிங்ஸ் இலவன் பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் தலா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இதனால் அடுத்த சில ஆட்டங்கள் இந்த அணிகளின் பிளே ஒவ் சுற்று வாய்ப்பை தீர்மானிக்கும்.