Photo: ICC Twitter
இலங்கைக்கு எதிரான 2 ஆவது டி-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது.
தென்னாபிரிக்க அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது.இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் இலங்கையை எளிதில் தோற்கடித்து டி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த நிலையில், இலங்கை-தென்னாபிரிக்க அணிகள் இடையிலான 2 ஆவது டி-20 கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக குசல் பெரேரா 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்ஸி, எய்டன் மார்க்ரம் தலா 3 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.
இதையடுத்து, 104 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, ஒரு விக்கெட் மாத்திரம் இழந்து 105 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் குயிண்டன் டி கொக் 58 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 21 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரை தென்னாபிரிக்க அணி வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.