January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மும்பையை சமாளிக்குமா சென்னை?

(Photo: BCCI/IPL)

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் வழமையாக எதிரணிகளை கிறங்கடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை கதிகலங்கிப்போய் இருக்கின்றது. இவ்வருட தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தாலும் இதுவரை அவர்கள் விளையாடிய 10 ஆட்டங்களில் 3 வெற்றிகளையே பெற முடிந்துள்ளது.

இதனால் சென்னை அணியின் பிளே ஓவ் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் எஞ்சியிருக்கும் போட்டிகள் சகலவற்றிலும் சிறந்த ஓட்ட வேகத்துடன் வெற்றிபெற்றாக வேண்டும். அப்படிப் பார்த்தால் சென்னை அணிக்கு இன்னும் 4 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. அந்த நான்கு ஆட்டங்களிலும் வெற்றிபெற்றாலும் மொத்த வெற்றிகளின் எண்ணிக்கை 7 ஆகப் பதிவாகும். அப்போது அவர்களுக்கு 14 புள்ளிகள் கிடைக்கும்.

என்றாலும் ஏனைய அணிகளின் போட்டி முடிவுகள் பிரகாரமே சென்னை அணியின் பிளே ஓவ் சுற்று வாய்ப்பு தீர்மானிக்கப்படும். இவ்வாறான சூழலில் பலம் வாய்ந்த மும்பை அணியை சார்ஜாவில் இன்று சென்னை அணி எதிர்கொள்கின்றது.

சென்னை அணியைப் பொறுத்தவரை முதியோர் அணியாகவே மாறிவிட்டது. அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி, ஷேன் வொட்ஸன், அம்பாட்டி ராயுடு, கேதர் யாதவ் என அத்தனை பேரும் துடுப்பாட்டத்தில் ஏமாற்றுகின்றனர். பெப் டுபிளெசி மாத்திரமே நம்பிக்கை அளிக்கிறார்.

இவ்வாறான நிலையில் சகலதுறை வீரரான டுவேன் பிராவோ உபாதை காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். காலில் ஏற்பட்டுள்ள உபாதையால் பிராவோ இனிவரும் ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது சென்னை அணியை மேலும் வலுவிழக்கச் செய்வதாய் அமைந்துள்ளது.

பந்துவீச்சில் பியூஸ் சாவ்லா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தொடர்ந்து சொதப்புவதால் துடுப்பாட்டத்தில் அபரிமிதமான திறமையை வெளிப்படுத்தி மாபெரும் ஓட்ட எண்ணிக்கையைக் குவித்தாலே வெற்றிபெற முடியும் என்ற நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டுள்ளது.

ஏனெனில், எதிரணியான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலமிக்க அணியாக பிரகாசித்து வருகிறது. 9 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள அவர்கள் 6 வெற்றிகளுடன் பிரகாசமான வாய்ப்பில் இருக்கிறார்கள்.

குயின்டன் டி கொக், அணித்தலைவர் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் துடுப்பாட்டத்தில் மிரட்டுகின்றனர். இவர்களுடன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிரான் பொலார்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் வெளுத்து வாங்குகின்றார்கள்.

பந்துவீச்சிலும் ஜஸ்பிரிட் பும்ரா, ட்ரென்ட் பௌல்ட், ஜேம்ஸ் பெட்டின்ஸன், கோல்டர் நெய்ல், ராகுல் சகார் ஆகியோர் அச்சுறுத்துகின்றனர். இதனால் மும்பை அணியை சகலதுறைகளிலும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் சென்னைக்கு ஏற்பட்டுள்ளது.

ஆட்டம் நடைபெறும் சார்ஜா மைதானம் ஓட்டங்களைக் குவிக்க இலகுவானது என்பதால் சென்னை அணி மாபெரும் ஓட்ட எண்ணிக்கையை எட்டினால் மாத்திரமே அவர்களால் மும்பை அணிக்கு எதிராக சவால் விடுக்கக்கூடியதாக இருக்கும். எவ்வாறாயினும், முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய தைரியம் மாத்திரமே தற்போதைக்கு சென்னை அணியிடம் உள்ளது.