Photo: Sri Lanka Cricket
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணித் தலைவர் கேசவ் மகராஜ் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் எய்டன் மார்க்ரம் அதிகபட்சமாக 48 ஓட்டங்களை எடுத்தார்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் வனிந்து ஹஸரங்க 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 164 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியை தழுவியது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.
இதன்படி, 28 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
தென்னாபிரிக்க அணியின் எய்டன் மார்க்ரம் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.