July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டயமண்ட் லீக் மெய்வல்லுனர்: இலங்கை வீரர் யுபுன் அபேகோனுக்கு 9 ஆவது இடம்

சுவிட்சர்லாந்தின் நேற்று நடைபெற்ற டயமண்ட் லீக் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் 9 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

உலக மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரின் கடைசி கட்டம் சுவிட்சர்லாந்தின் சூரிக்கில் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

உலகின் முன்னணி மெய்வல்லுனர்கள் பங்குபற்றிய இந்தப் போட்டியில் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர வீரரான யுபுன் அபேகோன் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியில் பங்குபற்றியிருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அமெரிக்க மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குகொண்ட இப்போட்டியில் யுபுன் அபேகோன் 9 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
போட்டியை நிறைவுசெய்ய 10.25 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

இதன்படி, 12 சுற்றுக்களைக் கொண்ட இந்த ஆண்டுக்கான டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடர் நேற்று நிறைவுக்கு வந்ததுடன், 24 வீரர்கள் பங்குகொண்ட ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில் 14 ஆவது இடத்தை யுபுன் அபேகோன் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக கடந்த ஜீன் மாதம் இத்தாலியின் நடைபெற்ற டயமண்ட் லீக்கில் முதல் முறையாக பங்குகொண்ட யுபுன், போட்டியை 10.16 செக்கன்களில் நிறைவுசெய்து நான்காவது இடத்தைப் பெற்று டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை உறுதிசெய்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நேற்று நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 9.87 செக்கன்களில் நிறைவுசெய்த அமெரிக்க வீரர் பிரெட் கெர்லி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், கனடாவின் அன்ட்ரே டி கிராஸ் 9.89 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, 9.91 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த மற்றுமொரு அமெரிக்க வீரர் ரொன்னி பேக்கர் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.