July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை – ஓமான் அணிகள் மோதும் டி-20 போட்டிக்கான அட்டவணை வெளியானது

இலங்கை அணி ஓமானுக்கு எதிராக விளையாடவுள்ள இரண்டு டி-20 போட்டிகள் மற்றும் ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான இரண்டு பயிற்சிப் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன் ஆயத்தமாக, இலங்கை அணி அடுத்த மாதம் ஓமான் அணியுடன் இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

அந்தத் தொடரையடுத்து, டி-20 உலகக் கிண்ணத்துக்கு முன் ஐ.சி.சி.யினால் ஏற்பாடு செய்துள்ள இரண்டு பயிற்சிப் போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது.

இந்த நிலையில், குறித்த போட்டிகளுக்கான போட்டி அட்டவணை இன்று (9)வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி ஓமானுக்கு புறப்பட்டு செல்லவுள்ள இலங்கை அணி, அந்த அணியுடன் 7 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் டி-20 போட்டியில் விளையாடவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் ஐ.சி.சி ஏற்பாடு செய்துள்ள பயிற்சிப் போட்டிகளில், இலங்கை அணி விளையாடவுள்ளது.

இம்முறை டி-20 உலகக் கிண்ணத்தில் தகுதிகாண் போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணி, நமீபியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

நமீபியா அணிக்கு எதிரான போட்டி ஒக்டோபர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி 20 ஆம் திகதியும், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டி 22 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

முதலிரண்டு போட்டிகளும் அபுதாபியில் நடைபெறவுள்ளதுடன், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டி சார்ஜாவில் நடைபெறவுள்ளது.