தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி, ஐ.சி.சி ஆண்கள் உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் ஐந்தவாது இடத்துக்கு முன்னேறியது.
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று இரவு (07) நடைபெற்ற மூன்றாவதும், கடைசியுமான தீர்மானமிக்க ஒருநாள் போட்டியில் 78 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
அத்துடன், 2023 உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கு தேவையான சுப்பர் லீக் புள்ளிகளையும் இலங்கை அணி பெற்றுக் கொண்டது.
இந்தத் தொடர் ஆரம்பமாவதற்கு முன் உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் 11 ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி, ஒருநாள் தொடரை வென்றதன் பிறகு 42 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் இங்கிலாந்து அணி 95 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி இதுவரை விளையாடிய 15 போட்டிகளில் 9 இல் வெற்றியீட்டியுள்ளது.
80 புள்ளிகளுடன் பங்களாதேஷ் அணி இரண்டாவது இடத்திலும், 60 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இலங்கையுடனான ஒருநாள் தொடரை இழந்த தென்னாபிரிக்க அணி 34 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.