November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்காவை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி..!

Photo: Sri Lanka Cricket

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதன்மூலம் ஒருநாள் தொடரை 2 – 1 என இலங்கை அணி கைப்பற்றியதுடன், 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாபிரிக்காவை ஒருநாள் தொடரில் வெற்றி கொண்டு சாதனை படைத்துள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இலங்கையுடன் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுப்பர் லீக்கிற்காக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

முன்னதாக நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளும் 1-1 என சமநிலை பெற்ற நிலையில், தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கின்ற மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில்  நடைபெற்றது. ‘

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

இதன்படி, இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த அவிஷ்க பெர்னாண்டோ 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஆரம்ப வீரரான தினேஷ் சந்திமால் 9 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து மத்திய வரிசையில் சரித் அசலன்க தவிர்ந்த ஏனைய அனைவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேற 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் சரித் அசலன்க 47 ஓட்டங்களையும் தனஞ்ஜய டி சில்வா 31 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

தென் ஆபிரிக்க அணி சார்பில் கேசவ் மகராஜ் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜோர்ஜ் லின்டே மற்றும் தப்ரைஸ் சம்ஷி ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

பின்னர் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 204 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, ஆரம்பம் முதல் இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் 30 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா அணி தோல்வியைத் தழுவியது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹென்ரிச் கிலாசன் 22 ஓட்டங்களையும், ஜென்னமன் மலன் 18 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் அறிமுக வீரரான மஹீஷ் தீக்ஷன 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்படி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 க்கு 1 என இலங்கை அணி கைப்பற்றியது.

போட்டியின் ஆட்ட நாயகனாக துஷ்மந்த சமீர தெரிவாக, தொடர் நாயகன் விருதை மூன்று போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சரித் அசலன்க பெற்றுக் கொண்டார்.

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.