Photo: ICC Twitter
இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 290 ஓட்டங்கள் பெற்று சகல விக்கட்டுகளையும் பறிகொடுத்தது.
இதன்பிறகு 99 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 127 ஓட்டங்களையும், புஜாரா 61 ஓட்டங்களையும், ரிஷப் பாண்ட் 50 ஓட்டங்களையும், ஷர்துல் தாகூர் 60 ஓட்டங்களையும் எடுத்ததன் மூலம், இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 466 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதன் மூலம் 368 ஓட்டங்ளை வெற்றி இலக்காக கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதனால், இங்கிலாந்தை 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.அத்துடன், லண்டன் ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி வெற்றியீட்டியது.
கடந்த 1971ல் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டில் அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துடன் மோதின.இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 355 ஓட்டங்கள், இந்தியா 285 ஓட்டங்கள் எடுத்து, 71 ஓட்டங்கள் பின்தங்கியது.
அடுத்து இங்கிலாந்து 101 ஓட்டங்களுக்கு சுருண்டது.இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இதன் பிறகு லண்டன் ஓவல் மைதானத்தில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்தியா, 3 இல் தோல்வியை சந்திக்க, 5 போட்டிகள் சமநிலையில் முடிந்தது.தற்போது 50 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக ஓவல் டெஸ்ட்டில் வெற்றி பெற்று இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி மான்சஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.